திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் கரோனா நிவாரணநிதி மற்றும் இலவச மளிகைப்பொருட்களை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் கரோனா நிவாரணநிதி மற்றும் இலவச மளிகைப்பொருட்களை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன்: ஐ.பெரியசாமி தகவல் 

Published on

கூட்டுறவுத்துறையின் மூலமாக உறுப்பினர் அல்லாத விவசாயிகளையும் புதிய உறுப்பினர்களாக சேர்த்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்கப்படவுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மற்றும் புதுக்கோட்டை கிராமத்தில் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூ.2,000, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (ஜூன் 15) தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராசு தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் முருகேசன், மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் இலவச மளிகைப்பொருட்களை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் இரண்டாம் தவணையாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.129.81 கோடி கரோனா நிவாரண நிதி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக 6,45,782 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.129.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. உறுப்பினர் அல்லாத விவசாயிகளை புதிய உறுப்பினர்களாக சேர்த்து பயிர்கடன் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க கூடிய அரிசி, சர்க்கரை, கோதுமை உட்பட அனைத்து பொருட்களும் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணை 99.9 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன பொதுமக்களுக்கும் அந்தத் தொகை வழங்கப்படும். அதேபோல், இன்று முதல் இரண்டாம் கட்ட தவணை வழங்கப்படுகிறது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in