புதுவை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றித் தேர்வு: நாளை பதவியேற்கிறார்

புதுவை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றித் தேர்வு: நாளை பதவியேற்கிறார்
Updated on
1 min read

நாளை கூடும் புதுவை சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், புதிய சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.

புதுவை சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நாளை நடப்பதாக, சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். நேற்றைய தினம் மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரின் மனுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக சட்டப்பேரவைக் கட்சித்தலைவர் நமச்சிவாயம், கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இன்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. சபாநாயகர் தேர்தலுக்கு வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை கூடும் புதுவை சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், புதிய சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். தொடர்ந்து சபாநாயகர் பதவியேற்க அழைக்கப்படுவார். அவை முன்னவர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் சபாநாயகரை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைப்பார்கள்.

பின்னர் புதிய சபாநாயகரை எம்எல்ஏக்கள் வாழ்த்திப் பேசுவார்கள். 2001-ம் ஆண்டு புதுவை சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் ரெட்டியார்பாளையம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் 20 ஆண்டுகளாக இல்லை.

கடந்த சட்டப்பேரவையில் 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது நடந்த தேர்தலில் பாஜகவில் 6 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற செல்வம் சபாநாயகராகியுள்ளார். பாஜகவில் 2 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகராகப் பதவியேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in