Published : 15 Jun 2021 01:46 PM
Last Updated : 15 Jun 2021 01:46 PM

கரோனா தொற்று இல்லாமல் பிற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரோனா அல்லாத பிற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான மருத்துவ வசதிகளை அளிப்பது, மருத்துவத் துறையில் முன்னேறி வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப உயர்தர சிகிச்சை வழங்குவது, இதன்மூலம் இந்தச் சமுதாயத்தை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றுவது ஆகியவை மாநில அரசின் கடமைகளாகும்.

கரோனா தாக்கம் அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில், கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் அந்த நோய்களுக்கான சிகிச்சை பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, உயிர்க்கொல்லி நோயான கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதன் விளைவாக, அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுக்கான பெரும்பாலான படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக மாற்றப்பட்டதன் காரணமாக, கரோனாவால் பாதிக்கப்படாத பிற நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

சென்னை, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இதுபோன்ற நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வளாகம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு சாலை விபத்தினால் காயமடைந்தவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் மட்டுமே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

இதற்கு இன்னமும் சிறிது காலமாகும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக, செய்திகள் வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுபோன்ற மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள்தான்.

இந்த நிலை நீட்டிக்கப்பட்டால், கரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா தொற்று இல்லாத பிற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x