

பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்திட, கரோனா நிவாரண நிதியாக ரூ.7,500/- வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூன் 28-30 தேதிகளில் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டுப் போராட்டம் அறிவித்துள்ளன.
இதுகுறித்து இடதுசாரி கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், என்.கே.நடராஜன் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
“அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வு காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, மோடி அரசு தொடர்ச்சியாக பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தி வருகிறது.
கடந்த 40 நாட்களில் மட்டும் 21 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100/-ஐத் தாண்டியுள்ளது. டீசல் விலை லிட்டர் ரூ.100/-.ஐத் தொடும் நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலையும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்.
மோடி அரசின் கொள்கையினால் இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து மந்தநிலைக்குச் சென்றுள்ளது. அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலையிழப்புகளும், வருமானமின்மையும் அதிகரித்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. மோடி அரசு இதனைத் தடுப்பதற்கு மாறாக வேடிக்கை பார்க்கிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கக் கோரியும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7500/- மற்றும் உணவுப் பொருட்கள் 6 மாத காலத்திற்கு வழங்கக் கோரியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறைகூவலுக்கேற்ப தமிழகத்தில்,
* வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக. இதன் மீதான கலால் வரியை உடனடியாகக் குறைத்திடுக.
* உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து தங்கு தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திடுக. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடுக.
* கரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ.7,500/- வழங்கிடுக.
* மத்திய தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கிடுக.
* தடுப்பூசி இலவசமாக செலுத்துவதற்குத் தங்கு தடையின்றி மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதோடு, செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு தமிழக அரசிற்கு அனுமதி வழங்கிடுக.
இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி 2021 ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை வலியுறுத்திய இயக்கங்களை நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வியக்கம் கரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். இவ்வியக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தந்து வெற்றிபெறச் செய்வதுடன், மத்திய மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக கண்டனக் குரலெழுப்பிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.