டாஸ்மாக் கடைகள் திறப்பு; நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு விற்பனை: அன்புமணி விமர்சனம்

அன்புமணி: கோப்புப்படம்
அன்புமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம் என, மதுக்கடைகள் திறப்பு குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், நேற்று (ஜூன் 14) முதல் வரும் 21-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, அந்தத் தளர்வுகளில் தமிழக அரசு அறிவித்தது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை இச்சூழலில் திறப்பது தொற்று பாதிப்பை அதிகப்படுத்தும் என்றும், மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அரசு அறிவித்தபடி கரோனா கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதாலேயே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள்தான் திறந்துள்ளன என்றாலும், வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.

கரோனா நிதியுதவியாக ரூ.4,200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி ரூ.165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5,000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?

மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவதுதான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in