Published : 15 Jun 2021 12:36 PM
Last Updated : 15 Jun 2021 12:36 PM

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து ஜூன் 17ஆம் தேதி பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை

மதுக்கடைகள் திறப்புக்கான காரணங்கள் உண்மை இல்லை என்பதால்தான் முதல்வரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது. மதுக்கடைகளைத் திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல. மது ஆலைகளின் நலனுக்கான அரசுதான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் குடும்பங்களில் மீதமுள்ள உடமைகளையும் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்கவே முடியாததாகும்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல். அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல் முடக்குவது ஆகும். இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு உண்டு.

அதனால், குறைந்தபட்சம் கரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் வரையிலாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறந்து மிகப்பெரிய தீங்கை இழைத்திருக்கிறது திமுக அரசு.

மதுக்கடைகளைத் திறந்திருப்பது குடும்பங்களையும் சீரழிக்கப் போகிறது. கரோனாவையும் பரப்பப் போகிறது என்பது முதல் நாள் நிகழ்வுகளிலிருந்தே உறுதியாகிவிட்டது. மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.

பெரும்பான்மையான கடைகளில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும், சில கடைகளில் இரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான தொலைவுக்கும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி அருந்தினார்கள். அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் கூட இல்லை. மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும்தான் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மூக்குக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தனர்.

மது வாங்க வந்திருந்த எவருக்கும் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படவில்லை. மதுக்கடைகள் கரோனா மையங்களாக மாறுவதற்கு இந்தக் காரணங்களே போதுமானவை. ஆனால், அதைப் பற்றி அரசும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுக்கடைகளுக்கு வந்தவர்களை எல்லாம், வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வந்தவர்களைப் போல வரவேற்று, 5 மணிக்குள் மதுக்கடை வளாகத்திற்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற அனைவருக்கும் மதுப்புட்டிகள் வழங்கப்பட்டன. இந்த அளவுக்கு பொறுப்புணர்வு அரசு நிர்வாகத்தில் காட்டப்பட்டிருந்தால் தமிழகம் எப்போதோ முதன்மை மாநிலமாக உயர்ந்திருக்கும்.

படம் எல்.சீனிவாசன்

மதுக்கடைகளைத் திறக்க நேரிட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், மதுக்கடைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவை விற்றுதான் வருவாய் ஈட்டி நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையிலுள்ள அரசு அதைச் செய்யாது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்காக முதல்வர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கரோனா குறைந்து விட்டதால்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாள் கூறுகிறார். கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாள் தெரிவிக்கிறார். இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும்.

அவர் கூறும் காரணங்கள் உண்மை இல்லை என்பதால்தான் முதல்வரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது. மதுக்கடைகளைத் திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது.

அதனால்தான் மக்களின் நலன் கருதியும், கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. கரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

பாமக மூத்த தலைவர்களும், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, 5 பேருக்கு மிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும் ஏந்தி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்துவர். பாமகவினரும், மதுவுக்கு எதிரானவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பான சூழலில் இந்தப் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x