Published : 15 Jun 2021 03:12 am

Updated : 15 Jun 2021 05:28 am

 

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 05:28 AM

ஜூன் 15: ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாள்’ - முதியோரை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்!

world-elder-abuse-awareness-day

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது மிகவும் மாறிவிட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. முதியோர் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது.

கிராமப்புறங்களில் முதியவர்களின் நிலை சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. கிராமங்களில்தான் முதியவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் உள்ள முதியோர் இன்றும் இளைஞர்களால் மதிக்கப்பட்டுத்தான் வருகிறார்கள்.


நகர்ப்புறங்களில் பல குடும்பங்களில் உள்ள முதியோருக்கு தக்க மரியாதைகிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை. குடும்பங்களில் நிதி வசதிகுறைவால் பாதிக்கப்படுவோர் முதியோரே. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோரை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில்வைத்துக் கொண்டு, பணத்துக்காக அவர்களை ஓரளவு மதித்து வருகிறது.

இந்த கரோனா காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை. வருமானமும் கிடையாது. குடும்பத்தை நடத்துவதே பெரிதும் சிரமமாக இருக்கும் நிலையில், முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களால் முடிவதில்லை.

அதேநேரம், வசதி படைத்தவர்கள் வீட்டிலும் முதியவர்கள் நன்றாக மதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிட முடியாது.காசோலையில் போலி கையெழுத்து போட்டு பணத்தை அபகரிப்பதும், பெரியோரைத் துன்புறுத்தி தன் பெயருக்கு சொத்தைஎழுதித் தரும்படி கட்டாயப்படுத்துவதும் அநேக குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு தீர்வு என்ன?

முதலில் வறுமைக்கோட்டுக்கு கீழேஉள்ள குடும்பங்களுடன் சமூக நலத் துறையின் மூலமாகவும் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மூலமாகவும் நேரடியாகத்தொடர்புபடுத்த வேண்டும். இளைஞர்களின் வருமானம் எவ்வளவு, எத்தனை பேர் படித்தவர்கள், படிக்காதவர்கள் எத்தனைபேர், வேலைக்குப் போக தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர் போன்ற விபரங்களைச் சேகரிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு அவர்களுக்கு வேலை பெற்றுத் தரஉதவ வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வங்கியின் மூலம் நிதி உதவி பெற உதவி செய்ய வேண்டும்.

மதுப் பழக்கம் உள்ள இளைஞர் களுக்கு, அப்பழக்கத்தை கைவிட உளவியல் நிபுணர் மூலம் முதியவர்கள் மற்றும்இளைஞர்களுடன் கலந்து பேசி அவர்களிடமுள்ள தலைமுறை இடைவெளியை குறைத்து நல்ல குடும்ப சூழ்நிலையை உருவாக்கலாம்.

அதேபோல் வசதி படைத்த குடும்பத்தில் உள்ள முதியவர்கள், நல்ல சூழ்நிலையிருக்கும் போதே உயில் எழுதி வைத்துவிடுவது நல்லது. மேலும் போலி கையெழுத்து யார், யார் இடுவார்கள் என்பதை ஓரளவுக்கு தெரிந்து கொண்டு, வங்கிமேலாளருக்கு இதுபற்றி தெரிவித்து விடவேண்டும். கணவன், தனது மனைவியின்பெயரில் வீடோ, நிலமோ தனக்குப் பின்என்று எழுதி வைப்பதோடு, வங்கியில் மனைவியின் பெயரில் பணத்தையும் போட்டு வைக்கலாம். இது எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கு இளைஞர்களைச் சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்கும்.

மேலும், நோயுற்று தொடர் சிகிச்சைபெறும் முதியோருக்கு மாதத்துக்கு ஒருமுறை மருந்தை இலவசமாக அரசாங்கம் கொடுக்கலாம். அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்றஉபகரணங்களை இலவசமாக கொடுக்க அரசு முன் வரலாம்.

ஐக்கிய நாடுகள் சபை, முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம்தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்புவிழிப்புணர்வு ஊட்டும் நாளாக’ 2006-ம்ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம், பள்ளி மாணவ, மாணவியருக்கு ‘முதியோரை மதித்தல்’ பற்றி குடியரசுத் தலைவர் வானொலி மூலம் சிறப்புரையாற்றலாம். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி, அனைத்து பள்ளி மாணவ – மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், முதியோரை மதித்து நடக்கும்இளைஞர்களைப் பாராட்டி ‘பத்ம’ விருதுக்கு நிகரான தேசிய விருதை வழங்க ஏற்பாடு செய்யலாம். இவ்விருதுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரைத்தேர்ந்தெடுத்து ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கஏற்பாடு செய்ய வேண்டும். இது இளைஞர்களிடையே முதியோரை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிதும் உதவும். அதேபோல், ‘முதியோரை மதித்தல்’ பற்றிய கட்டுரைகள் பள்ளி பாட நூலில் இடம் பெறச் செய்யலாம்.

உறுதிமொழி

‘முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் – இவை வாய்மொழியாகவோ. வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் வந்தாலும், அவற்றைக் களைவதற்காக – முளையிலேயே கண்டுபிடித்து தலையிட்டு தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும்பாடுபடுவேன். அவர்களுடைய அனைத்துவகையான தேவைகளுக்கும் – அதாவதுஉடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும்,அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், உரிய அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத்தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்’ என்று மாணவர்கள், இளைஞர்களை உறுதிமொழி ஏற்கச் செய்யலாம்.

மேற்கண்ட வழிமுறைகளைத் கடைபிடித்து வந்தால் வருங்கால சமுதாயம் ‘முதியோரை மதிக்கும்’ சமுதாயமாக உருவாகும் என்பது நிச்சயம்!

டாக்டர் வி.எஸ். நடராஜன்

கட்டுரையாளர்: முதியோர் நல மருத்துவர், சென்னை


ஜூன் 15முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாள்World Elder Abuse Awareness Dayமுதியோர்முதியவர்கள்வயது முதிர்ந்தோர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x