Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

ரேஷன் கடைகளில் இன்று முதல் 14 மளிகைப் பொருள், ரூ.2,000 இம்மாத இறுதி வரை பெறலாம்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

சென்னை

இரண்டாம் தவணை கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை ஜூன் 15 (இன்று) முதல் இம்மாத இறுதி வரை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றுஉணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து, கரோனா நிவாரணமாக 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

தற்போது 2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இன்றுமுதல் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர்அர.சக்கரபாணி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கரோனா நிவாரணம் 2-வதுதவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் 15-ம் தேதி (இன்று) முதல் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்துக்கேற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரப்படாமல் இந்த மாத இறுதி வரை சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிக்கப்படும்.

14 வகை மளிகைப் பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x