

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடைக் காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் வரையான மீன்பிடித் துறைமுகங்களைச் சார்ந்துள்ள விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால், விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜூன் 15) முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீனவர்கள் கடைபிடிப்பது தொடர்பாக, அந்தந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்கு, மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர் தலைமை வகித்தார். டிஎஸ்பி கணேஷ், மீன்வளத் துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயோலா மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தம் உள்ள 240 விசைப்படகுகளில் 120 படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், மீதம் உள்ள 120 படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் சுழற்சி முறையில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.
கரோனா தடுப்பூசி
குறைந்த எண்ணிக்கையிலான மொத்த வியாபாரிகள் மட்டுமே மீன்களை வாங்க மீன் பிடித் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பிடித்து வரும் மீன்கள் அன்று இரவே சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்யப்படும். அனைவரும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதனை காவல் துறையினர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிரமாக கண்காணிப்பர். மீன்பிடித் துறைமுகத்துக்கு வரும் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி கரோனா தடுப்பூசி போடப்படும் என்பன உள்ளிட்ட 22 முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அங்கு நடந்த கரோனா தடுப்பூசி முகாமில், படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.