

பகலில் நோட்டமிட்டு, இரவில் காரில் சென்று ஆடு-கோழிகளைத் திருடிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பூபாலன்(54), அப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29-ம் தேதி இரவு அவர் வளர்த்து வரும் 15 கோழிகளுக்கு உணவு கொடுத்து, கூண்டில் அடைத்து பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 15 கோழிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதேபோல், கொரட்டூர் போத்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இந்திரா என்பவரது 2 ஆடுகளும் கடந்த 2-ம் தேதி திருடு போயிருந்தன.
இதுகுறித்த புகார்கள் தொடர்பாக கொரட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமரா பதிவு
சம்பவ இடத்துக்கு அருகில்பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில், ஒரு ஆண், பெண்ஆகியோர், கைக்குழந்தையுடன் காரில் வந்து, கோழி, ஆடுகளைத் திருடி, அதை காருக்குள் ஏற்றி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்டதாக ஈக்காட்டுத்தாங்கல் சுந்தர் நகர் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அஷ்ரப்(38), அவரது மனைவி லஷ்மி(32) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், கணவன், மனைவி இருவரும், தங்களது 6 மாத கைக்குழந்தையுடன் கொரட்டூர் பகுதியில் காரில்வந்து நோட்டமிட்டு, கோழி,ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 12 கோழிகள், 3 ஆடுகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அஷ்ரப் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவேற்காடு காவல் நிலைய எல்லையில் ஆடு திருடியது தொடர்பாக கைதாகி, சிறையிலிருந்து வெளியே வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.