

தமிழ்நாடு செய்தித்தாள் காகிதநிறுவனம் 2020-ம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான ‘தங்க மயில்’ (கோல்டன் பீக்காக்) விருதை வென்றுள்ளது. கடந்த ஜூன் 10-ம் தேதி ஐசிசிஎஸ்ஆர் கார்ப்பரேட் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்வில் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
உலகளாவிய மற்றும் தேசியஅளவிளான எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காகிதம், சிமென்ட்,சுரங்கம் போன்ற துறைகளில் தனது வணிக முறையிலும், நடவடிக்கையிலும் நாணயம், வெளிப்படைத் தன்மை, ஒழுக்கத்தை நெறியோடு பின்பற்றுகிற நிறுவனங்களுக்கு டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் என்றஅமைப்பால் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
காகித நிறுவனத்தின் ஆலைகளை சுற்றியுள்ள அடித்தட்டு மக்கள், நலிந்த மாணவர்களுக்கு பல சமூகநலப் பணிகளை, தனதுவிரிவான நலத்திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தனது ஆலைக்கு உட்பட்ட இடத்தில் புதிய பள்ளிக்கூடத்தை நிறுவி வருகிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் ஒன்றிணைந்து, 1.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான தோட்டங்களை மேம்படுத்தி வருகிறது.
கரூரில் காகித நிறுவனத்துக்கு சொந்தமான சமூக கூடத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் வசதியுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 31-ம் தேதி திறந்து வைத்தார். இந்த மையத்துக்கு, காகித நிறுவனம் தடையில்லா ஆக்சிஜன், மின்சாரம் மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது.
தற்போது, தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள கோல்டன் பீக்காக் விருது, வரும் ஆண்டுகளில் அதன் சமூகநலப் பணிகளை பொறுப்புடன் சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.