

குடிசைகள் இல்லாத திருச்சி மாநகரத்தை உருவாக்கும் நோக் கத்தில், குடிசைகள் மற்றும் நீர் நிலைகள், சாலையோரங்கள் உள் ளிட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிப்போருக்காக 40 ஏக்கர் பரப் பளவில் அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டித் தரப்பட உள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
65 வார்டுகளைக் கொண்ட திருச்சி மாநகராட்சியில் சுமார் 11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்நகரின் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை இருந்து வருகிறது.
வளர்ச்சியில் பின்தங்கிய திருச்சி
கடந்த சில ஆண்டுகளில் சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களின் வளர்ச்சியை ஒப்பிடுகையில், திருச்சி மாநகரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப் பதாக இங்குள்ள மக்களிடையே வருத்தம் நீடித்து வருகிறது. அதேபோல இங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கான வீடு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரத்துக்கான திட்டங்களும் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. குறிப்பாக மேலச்சிந்தாமணி, செட்டியார் தோப்பு, கீழ அடையவளஞ்சான், இந்திரா நகர், தேவதானம், பூசாரித் தெரு, காந்தி நகர், அரியமங்கலம் தெற்கு உக்கடை, கெம்ஸ்டவுன், கல்பாளையம், அலிக்கான் குளம், கக்கன் காலனி, ஒத்தக்கடை, பெரியமிளகுபாறை, எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங் குளம், எம்ஜிஆர் நகர் உட்பட மாநகரின் 223 பகுதிகளில் 39,221 வீடுகள் குடிசை மற்றும் அதற்கும் கீழான நிலையிலேயே இருப்பதாகவும், இவற்றில் கடந்த 2019-ம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி 1,30,997 பேர் வசிப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக தற்போது பொறுப் பேற்றுள்ள கே.என்.நேரு, இங்கு குடிசையில் வசிப்போர் மற்றும் வீடற்றவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு பெற்றுத் தரும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர மாநகர பகுதிகளில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் குடிசைவாசி களுக்கு அவர்களின் இடத்திலேயே அரசுத் திட்டங்கள் மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.
திருச்சியின் முகம் மாறும்
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது ‘‘திருச்சியின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பின்தங்கியுள்ளது. எண் ணற்ற திட்டங்களை இந்நகரம் எதிர்நோக்கியுள்ளது.
தற்போது குடிசைகள் மற்றும் நீர் நிலைகள், சாலையோரங்கள் உள் ளிட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிப்போருக்காக 40 ஏக்கர் பரப் பளவில் அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டித்தரப்பட உள்ளன. இதற்கான நிலம் தேர்வு, திட்ட மதிப்பீடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொண்டு, இன்னும் 2 ஆண்டுகளில் திருச்சியின் முகத் தையே மாற்றிக் காட்டும் முனைப் புடன் செயல்பட்டு வருகிறோம். இதில், உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, சாலைகள் விரிவாக்கம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், நீர்நிலைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்’’ என்றார்.
கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தல்
இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, ‘‘இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் நாளை (ஜூன் 16) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இத்திட்டத்தின் முதற்கட்ட முன்னுரிமை பட்டியலுக்கான கணக்கெடுப்பில் 4 ஆயிரம் வீடுகள் இடம்பெறலாம்’’ என்றார்.