Last Updated : 15 Jun, 2021 03:14 AM

 

Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

ரேஷன் கடை ஊழியரின் ‘நமது அங்காடி’ வாட்ஸ்அப் குழு: அலைச்சலை போக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் உள்ளன? எப்போது அவை கிடைக்கும்? என்பது போன்ற தகவல்களை ‘நமது அங்காடி’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் நாள்தோறும் அனுப்பி மக்களின் அலைச்சலை போக்கும் வகையில் செயல் படும் ரேஷன்கடை ஊழியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் கரந்தை பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஏபி002’ ரேஷன் கடையில், 1,350 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கடையின் விற்பனையாளரான கணேசன், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் செல் போன் எண்களைப் பெற்று, ‘நமது அங்காடி’ என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார். அதில், நாள்தோறும் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு, கடை செயல்படும் நேரம், அன்னைய தினம் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களை பதிவிடுகிறார்.

இந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் `நமது அங்காடி' வாட்ஸ்அப் குழுவில் வரும் தகவல்களை பார்த்து, அதன்படி பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்று வருகின்ற னர். இதனால், ரேஷன் கடையில் கூட்டம் கூடுவது குறைந்துள்ளது. மக்களும் வீண் அலைச்சல் இன்றி ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக உள்ளதால், ரேஷன் கடை விற்பனையாளர் கணேசனின் செயலை பலரும் பாராட்டுகின்றனர்.

இதுகுறித்து கணேசன் கூறிய தாவது: பொதுமக்கள் நாள்தோறும் ரேஷன் கடைக்கு வந்து என்ன பொருட்கள் உள்ளன. எப்போது பொருட்கள் வழங்குவீர்கள் என கேள்வி கேட்ட வண்ணம் இருந் தார்கள். இவர்களுக்கு பதில் அளிப்பதற்கே அதிக நேரம் செலவிடவேண்டியிருந்தது. பொருட்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. எங்களுடைய வேலையின் நேரமும் அதிகமானது. அத்துடன், கரோனா தொற்றுக் காலத்தில் ரேஷனில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, ‘நமது அங்காடி' வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் (குரூப்) ரேஷன் கடை குறித்த அனைத்து தகவல்களையும் நாள்தோறும் பதிவிடுதால், தற்போது பொதுமக்கள் கடைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.

தெரு வாரியாக அன்றை தினம் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுவதால், குறிப்பிட்ட தெரு மக்கள் மட்டும் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வதால், எங்களுக்கும் வேலை சுமை குறைகிறது. மக்களுக்கும் அலைச்சல் குறைகிறது. இதில், செல்போன் இல்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் அனைத்து நாட்களிலும் வழங்கப் படுகிறது என்றார்.

எளிய மக்களின் வீண் அலைச்சலை போக்குவதுடன், அவர்களுக்கு பலனளிக்கும் விதமாக, வாட்ஸ்அப் குழு அமைத்து ரேஷனில் முறையாக பொருட்களை வழங்கி, முன்னோடியாக செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர் கணேசனின் செயலை அப் பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x