

பாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரோனா நிவாரண உதவித்தொகையுடன் மளிகை தொகுப்பு வழங்கும் பணி, சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம், தையல் இயந்தி ரங்கள் வழங்குவது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பி னர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), வில்வநாதன் (ஆம்பூர்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் தவணை யாக 4 லட்சத்து 29 ஆயிரத்து 234 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 85 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை யான மளிகை பொருட்களும் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் மட்டு மில்லாமல் அரசுத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, பாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது ஆய்வு முடிந்த பின்பு தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்பெண்ணையில் மழைக் காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை பாலாற்றில் கொண்டு வர நடவடிக்கை எடுக் கப்படவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலை களுக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய்களை உடைத்து அங்கி ருந்து தண்ணீர் எடுத்து செல்லும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். நீர்வரத்துக் கால்வாய்களில் செல்லும் தண்ணீர் கடைமடை வரை சென்ற பிறகு, அதிகாரிகளே தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு திருப்பி விடுவார்கள். எனவே, நீர்வரத்துக் கால்வாய்களில் யாரும் உடைப்பை ஏற்படுத்த வேண்டாம்.
அரசு நிலங்களை யாரும் ஆக்கிர மிக்க கூடாது. நிலங்களை ஆக்கிர மிப்பு செய்திருந்தாலும் அரசு கேட்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும், அணைக்கட்டு அருகே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல் அரசம்பட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார். நிகழ்ச்சியின் முடிவில், மாவட்ட சமூகநல அலுவலர் கோமதி நன்றி கூறினார்.