

தீவிபத்தால் சேதமடைந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்புப் பணி மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் கோயில் மேற்கூரை சேதமடைந்தன.
உடனடியாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்திற்கான காரணத்திற்கான உண்மை நிலையை அறிய மாவட்ட ஆட்சியர் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்தினால் சேதமடைந்த சன்னிதான மேற்கூரையை சீரமைக்கும் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைப்போல் மண்டைக்காடு கோயில் புனரமைப்புப் பணிக்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
மண்டைக்காடு கோயிலில் தேவபிரசன்னம், மற்றும் சன்னிதான மேற்கூரை அமைக்கும் பணியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; மண்டைக்காடு தீவிபத்து குறித்து தமிழக முதல்வர் கேள்விப்பட்டதும் போர்கால அடிப்படையில் கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள என்னிடம் அறிவுறுத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக பிளாஸ்டிக் தார்பாலினால் மேற்கூறை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் திருக்கோயிலை நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வுகாண இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள், பக்தர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவபிரசன்னம் பார்க்கவேண்டும் என்றும், ஆகம விதிகளின்படி இக்கோயில் ஏற்கனவே எப்படி இருந்ததோ அதைப்போல் கட்டித்தரவேண்டும் என வைத்த கோரிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அதனடிப்படையில் தேவபிரசன்னம் துவங்கியுள்ளது. தொடர்ந்து நாளை வரை பிரசன்னம் நடைபெறவுள்ளது. இதில் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் என்னன்ன பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியுமோ? அப்பணிகளை பக்தர்களின் மனம் புண்படாதவாறு மேற்கொண்டு மேற்கூரை அமைக்கப்படும்.
மண்டைக்காடு பகவதிதயம்மன் கோயில் மேற்கூரை முழுவதுமாக தீவிபத்தினால் சேதமடைந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் தீவைிபத்தினால் சேதமடைந்த மூலஸ்தான மேற்கூரையினை பழமை மாறாமல் புதுப்பித்திட ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கோயில் கருவறையில் மரசீலிங் மற்றும் சுற்றுப்பிரகாரத்தை சீர்செய்யவும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கோயிலில் தீதடுப்பு உபகரணங்கள், நீர்தும்பிகள் அமைத்திடவும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோகயில் கருவறை உட்பகுதி தளத்தினை சீரமைத்திடவும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கருவரை மரச்சட்டங்களில் செப்புவலை அமைத்திடவும், ரூ.3 லட்சம் மதிப்பில் கருவறை தீ பாதுகாப்பு கம்பிவலை அமைத்திடவும், ரூ.6 லட்சம் மதிப்பில் சுற்றுப்புற மண்டபம் பழுதுபார்த்து புதுப்பிப்பது என மாத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில் முதல்கட்டமாக பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கூடுதல் நிதி தேவைப்பட்டால் நிதி அளிக்க தயாராக இருக்கிறோம்.
மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அடங்கிய 4 பேர் குழுவினர் கோயிலில் பணிபுரியும் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டு தற்காலிக அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.
இதில் அஜாக்கிரதை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கோயிலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன்.
இது திட்டமிட்டு ஏற்பட்ட தீவிபத்து அல்ல. எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து. ஆனாலும் இறுதிகட்ட அறிக்கை வந்ததும் தீவிபத்து ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 20 இணை ஆணையர்கள் நியமிக்கப்படுவர்.
ஆகம விதிப்படி பயிற்சி பெற்ற அனைத்து தரப்பினரும் திரக்கேகாயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். மேலும் 827 நபர்களுக்கு தேவையான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் 6 இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.
ஆய்வின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.