அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்

அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்
Updated on
2 min read

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் கர்நாடக மாநிலச் செயலர் பதவி வகித்தவர் புகழேந்தி. ஜெயலலிதா, சசிகலா இருவரது அபிமானத்தைப் பெற்றவர்.

பரப்பன அக்ரஹார சிறையில் இருவரும் அடைக்கப்பட்டிருந்தபோதும், வழக்கு நேரத்தின் போதும், பின்னர் சசிகலா 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் உடனிருந்து பல்வேறு வசதிகளை செய்து வந்தவர் புகழேந்தி.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா சிறைச் சென்றபோது கர்நாடக மாநில செயலாளர் என்கிற முறையில் பார்த்துக்கொண்டார் புகழேந்தி. அதன் பின்னர் டிடிவி தினகரனுடன் அதிமுகவிலிருந்து வெளியேறினார். அதன் பின் கர்நாடக மாநிலச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டது.

டிடிவி தினகரனுடன் அமமுகவில் செயல்பட்டு வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப்பின் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து 2019 நவம்பரில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு செய்தித்தொடர்பாளர் பதவி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த நிலையில் புகழேந்தி உள்ளிட்ட சிலரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

“கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்.

அதிமுக செய்தி தொடர்பாளர் மற்றும் புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் பதவி வகிக்கும் வா.புகழேந்தி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. புகழேந்தி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அன்புமணி ராமதாஸ் ஓபிஎஸ் பற்றி கூறியதற்கு பதிலடியாக சில கருத்துகளை கூறியிருந்தார். ஓபிஎஸ்சை விமர்சிக்கும் அன்புமணி அதே ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பி,யாக இருக்கிறார். அன்புமணி தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார் என விமர்சித்தார்.

பாமக வென்ற 6 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது, அதிமுக வெற்றிபெற்ற தொகுதிகளில் பாமகவுக்கு எந்த விதமான வேலையும் இல்லை. எங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதுமே பாமகவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது, முதலில் உங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த பேட்டி அதிமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in