போலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

போலி ட்விட்டர் பதிவு: நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
Updated on
1 min read

தமிழக அரசுக்கு எதிராக தான் பதிவிட்டதாக போலி ட்விட்டரை உருவாக்கி அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தமிழ் திரையுலகில் செல்வாக்குமிக்க நகைச்சுவை நடிகராக விளங்கிய செந்தில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்தார். அதிமுகவின் நடசத்திர பேச்சாளராக தமிழகம் முழுவதும் வளம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு தாவினார், சமீபத்தில் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கரோனா தொற்றுப்பரவலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் தொற்றுப்பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டார். அதை கண்டிக்கும் வகையில் நடிகர் செந்தில் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டதாக செய்தி பரவியது.

மக்கள் உயிரைக்காக்க வேண்டிய நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அவசியமா? என்று கேட்டு பதிவிட்டிருந்ததாக செய்தி வெளியானது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் செந்தில். தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கியதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்தார்.

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்தை பதிவிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்தப்பதிவுகளை நீக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in