ஊரடங்கு அமலானால் தெரு விலங்குகள் உணவு குறித்தும் அரசு கணக்கில் கொள்ளவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு அமலானால் தெரு விலங்குகள் உணவு குறித்தும் அரசு கணக்கில் கொள்ளவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

எதிர்காலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியதற்கும், தமிழக அரசு 9 லட்ச 20 ஆயிரம் ரூபாய் விடுவித்ததற்கும் நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். தெருவிலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கும் திட்டம் வகுக்க வேண்டுமென நீதிபதிகள் வலியுறுத்தினர்.

தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதை முழுமையாக தடை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அதுவரை அவை கண்ணியமாகவும், மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாகி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அப்போது தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் பாதிக்கப்பட்டதால் தொடரப்பட்ட இந்த வழக்கின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக தெரிவித்து, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in