மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் குறித்த காலத்தில் தொடங்கியது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி மழை பெய்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இன்றும் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 23 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 12 மி.மீ., தென்காசியில் 5.40 மி.மீ., ராமநதி அணை, கருப்பாநதி அணை, செங்கோட்டையில் தலா 4 மி.மீ., கடனாநதி அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. சாரல் சீஸனில் அருவிகளில் குளிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 92.50 அடியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in