

மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மது விற்பனைக்கான பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்று முதல்வரும் அதையே கூறியுள்ளார். போலி மதுவைக் கட்டுப்படுத்தாதது தமிழக அரசின் தோல்வி என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலான நிலையில் கடந்த 35 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகளைத் திறக்கவேண்டும் எனவும், வேண்டாம் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று முதல் நீட்டிக்கப்படும் ஊரடங்கில் மதுக்கடைகளை தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் திறக்க அரசு அனுமதி அளித்தது.
பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும் என முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் கடைகள் திறந்தது குறித்து இன்று தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆட்சேபம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்தததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும்.
தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பைத் தடுக்க மதுக்கடைகளைத் திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது.
மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மது விற்பனைக்கான பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. கள்ளச் சாராயத்தைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.