Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

இன்று ஜூன் 14 - உலக ரத்த தான தினம்: பிறர் நலத்தை காப்போம்; நாமும் நலம் பெறுவோம்!

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்

இன்று ஜூன் 14-ம் தேதி உலக ரத்த தான நாள்.

ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் 6 லிட்டர் ரத்தம்இருப்பதாக மருத்துவ துறையில்கூறுகின்றனர். ரத்தத்தில் உள்ளஅணுக்கள் வெள்ளை அணுக்கள்,சிவப்பு அணுக்கள் என இரண்டுவகைப்படுகின்றன.

வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதற்குத் துணைபுரிகின்றன. சிவப்பு அணுக்கள், நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ‘ஹீமோகுளோபின்’ எனப்படும் சத்துப் பொருள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவையெல்லாம் உடல் முழுவதும் சென்று நமக்குதேவையான ஆற்றலை தருகின்றன.

ரத்தத்தின் அளவு பல்வேறு காரணங்களால் குறைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து குறைதல் அல்லது உடம்பில் ‘அனீமிக்’ என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுதல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், நம்முடைய சூழல் போன்றவற்றால் ரத்தத்தின் அளவு குறைகிறது. விபத்துகளாலும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, பிறருடைய ரத்தத்தை எடுத்துக் கொடுப்பது மருத்துவமுறையாக உள்ளது. இதைத்தான் ரத்த தானம் என்கிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்

நாம் ரத்த தானம் செய்யும்போது, நம் உடலுக்கும் அது நன்மை செய்கிறது. பொதுவாக ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகம்இருக்கும். அது நம் உடலில் கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து உடலுக்குச் சோர்வையும், துன்பத்தையும் தரும்.

ரத்த தானம் செய்யும்போது, இந்த அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன்செய்யப்படுகிறது. மேலும் ரத்த தானமாக நாம் ஒரு யூனிட் கொடுத்தால் அதை 3 பேருக்குப் பயன்படுத்துவார்கள். சில சமயம் ஒருவருக்கேகூட பயன்படலாம். இதனால்யாரோ ஒருவருக்கு நாம் நன்மை செய்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது.

கல்லூரியில் தேசிய மாணவர் படையில் இருந்தபோதுதான் முதன்முதலாக ‘குருதிக்கொடை’ என்று சொல்லக்கூடிய ரத்த தானம் வழங்கினோம். இது மனதுக்கு ஓர் ஊக்கத்தைக் கொடுத்தது. ரத்த வங்கியிலே பெயரைப் பதிவு செய்துள்ளோம். இதுவரை 18 முறை ரத்ததானம் செய்துள்ளோம்.

இன்றைய நவீன உலகில் மருத்துவத் துறை பெருமளவு வளர்ச்சிபெற்றுள்ளது. ரத்தத்தை ‘பிளாஸ்மா’, ‘ஹீமோகுளோபின்’ என பல வகையில் பிரிக்கின்றனர். இவ்வாறு ரத்தத்தின் உட்கூறுகளையும் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறைகளையும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் ரத்த தானம் என்பது மிகவும் பயனுடையதாக அமைகிறது.

ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால், நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை எரித்துவிடுகிறது என்கின்றனர். இது ரத்த தானம் செய்வதால் நம் உடலுக்குக் கிடைக்கும் பயனாகும்.

கோவை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களை ஊக்குவித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக 200, 300 யூனிட் ரத்தம் தானமாகக் கொடுத்து வருகிறோம். ரத்த தானம்செய்ய விருப்பம் உள்ள மாணாக்கர்களின் பெயரைப் பதிவு செய்துஅவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு நேரடியாகவே சென்று உதவக்கூடிய வகையிலும் மாணவர்கள் செயல்படுகின்றனர்.

எனவே, வாய்ப்பு உள்ளவர்கள், ரத்த தானம் வழங்க உடல் தகுதி உடையவர்கள் ரத்ததானம் செய்து நாமும் நலம் பெற்று, பிறர் நலமும் காப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x