Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்: திமுக இரட்டை வேடம் போடுவதாக எல்.முருகன் குற்றச்சாட்டு

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் அவரவர் இல்லங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் மதுக் கடைகளை மூடும் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்றுமுதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் இல்லங்கள் முன்பு மதுக்கடைகளுக்கு எதிரானவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்’ என்ற பதாகையை ஏந்தி அரசுக்கு எதிராக எல்.முருகன் உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய எல்.முருகன், ‘‘தமிழகத்தில் தற்போது தினந்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பு 350 முதல் 400 வரை இருந்து வருகிறது. இந்தமோசமான சூழலில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். கரோனா முதல் அலையின்போது கடந்த 2020 மே மாதம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்புதெரிவித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்தனது இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், இப்போது அவர்முதல்வரான பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்துள்ளார். மதுக்கடைகள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்’’ என்றார்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், நடிகை குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் அவரவர் இல்லங்கள் முன்பு மதுக்கடைகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x