

சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள நடமாடும் மருத்துவமனையில் 200 ஊர்தி ஓட்டுநர்கள் 2008 முதல் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களை கடந்த அதிமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்துதருவதாகக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெ.பார்த்தசாரதி (பனமரத்துப்பட்டி வட்டாரம்), வெற்றிவேல் (போளூர் வட்டாரம்) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (முக்கூடல் வட்டாரம்) ஆகிய மூவரும் இணைந்து 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை 200 ஊர்தி ஓட்டுநர்களிடமும் வசூல் செய்து முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அனைத்து மாவட்ட ஊர்தி ஓட்டுநர்கள் நடமாடும் மருத்துவமனை சார்பில் கடந்த 12-ம் தேதி புகார் மனு அளித்தனர். இந்த புகாரின்பேரில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் மேற்கண்ட நபர்கள் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் இவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு துணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.