Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி தவறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திட்டவட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கூட்டணி மூலமாக 23 தொகுதிகளைப் பெற்றுக்கொண்ட பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி வருகிறார். கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலில், போட்டியிட்ட 23-ல் 18 இடங்களில் தோல்வியடைந்ததை பற்றி பாமக ஆய்வு செய்ய வேண்டும்.

பாமகவின் தேர்தல் நிலைப்பாட்டில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதேபோல, அதிமுக தலைவர்களைப் பற்றிஅவர்கள் பேசுவதும் முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும், எந்த உதவியும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

போடிநாயக்கனூர், எடப்பாடி,அவினாசி உள்பட 51 தொகுதிகளில், 2016 தேர்தலில் பெற்ற வெற்றியைத்தான் தற்போதும் தக்க வைத்துள்ளோம். ஒரத்தநாடு, கன்னியாகுமரி உள்பட 9 தொகுதிகளில் பாமகவுக்கு எந்த செயல்பாடுகளும் கிடையாது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவின் செயல்பாடுகள் உள்ளன. எனவே, பாமக இல்லை என்றால், அதிமுக வெற்றிபெற்று இருக்காது என்று சொல்வது சரியில்லை.

ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால்தான், அதிமுகஎம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி. ஆனார். எனவே, அவர் ஓபிஎஸ்-ஐ தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது.

ஒரு கூட்டணியில் சேருவது, பின்னர் வெளியேறுவது, எங்களால்தான் எல்லாமே நடந்தது என்று கூறுவது பாமக-வுக்கு வழக்கம். `பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம்' என்று அதிமுக தலைவர்களோ, நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம்.

வன்னியருக்கு நல்லது செய்ய எண்டும் என்ற முறையில்தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் குறித்து பேசினால், நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. பாமக போன்ற சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா உள்ளிட்ட பதவிகள் குறித்து ஜூன் 14-ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒன்றியம் என்று சொல்வது தவறும் கிடையாது. ஆனால், கரோனா பாதிப்புக்கிடையே இது தேவையில்லாத பிரச்சினையாகும். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x