Last Updated : 14 Jun, 2021 03:12 AM

 

Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

நிதிச் சுமையை காரணம் காட்டி உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை குறைக்க அரசு திட்டம்?

மதுரை

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை நிதிச்சுமையை காரணம் காட்டி குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு அரசு தலைமை வழக்கறிஞர், ஒரு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஒரு தலைமை உரிமையியல் வழக்கறிஞர், 12 கூடுதல் அட்வகேட் ஜெனரல், 33 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 55 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 102 அரசு வழக்கறிஞர்கள், 15 கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் என 221 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. இதில் தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இது தவிர சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 46 தற்காலிக அரசு வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 21 தற்காலிக அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றக் கிளைக்கு நிரந்தர அரசு வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தற்போது பணியிலுள்ள நீதிபதிகள் சிலர் இப்பதவிக்கு பலரையும் சிபாரிசு செய்துள்ளதால் பலத்த போட்டி நிலவுகிறது.

சென்னை, மதுரையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்பதவிக்கு மூத்தவழக்கறிஞர்கள் தான் நியமிக்கப்படுவர். இவர்கள் முக்கிய வழக்குகள், சிக்கலான வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராவர். திமுகவில் மூத்த வழக்கறிஞர்கள் அதிகம் பேர் உள்ளதால் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நிதிச்சுமையைக் காரணம் காட்டி கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவி எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கான அதிகாரத்தை அடுத்த நிலை பதவியான கூடுதல் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவி எண்ணிக்கையைக் குறைக்கும்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஆஜராக வேண்டிய முக்கிய, சிக்கலான வழக்குகளில் அரசு சார்பில் வாதிடுவதற்காக திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான விடுதலை, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோரை நியமித்து வழக்குகளில் தீர்வு காண அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x