கோவை மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்: கரோனா தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்போவதாக அறிவிப்பு

ஜி.எஸ்.சமீரன்
ஜி.எஸ்.சமீரன்
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் தற்போதைய சூழலில், கரோனா தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியராக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதிமுதல் எஸ்.நாகராஜன் பணியாற்றி வந்தார். இவர் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவை சிறப்பான முறையில், எந்த வித சர்ச்சைகளும் இல்லாமல் நடத்த கோவை மாவட்ட ஆட்சியராக தேர்தல் ஆணையத்தால் நேரடியாக நியமிக்கப்பட்டார். அதன்படி,மாவட்டத்தின் 181-வது ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.நாகராஜன், சட்டப்பேரவைத் தேர்தலை எந்த வித சர்ச்சையும் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடித்தார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கள், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை எடுத்தது, கல்லாறு யானை வலசைப் பாதையில் உள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை, காடாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்டவை ஆட்சியர் எஸ்.நாகராஜனின் நடவடிக் கைகளில் குறிப்பிடத்தக்கவை. இவர், தமிழக நில நிர்வாக ஆணையராக நேற்று பணியிடம் மாற்றப்பட்டார்.

இவருக்கு பதில், தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 182-வது ஆட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.சமீரன், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.

தவிர, டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சட்டப் பிரிவில் முதுகலைப் பட்டயப் படிப்பு படித்துள்ளார். அதன் பின்னர், குடிமைப் பணித் தேர்வு எழுதி, கடந்த 2012-ம் ஆண்டு பேட்ச் நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக ஜி.எஸ்.சமீரன் தேர்வு செய்யப்பட்டார்.

இவர், பரமக்குடி துணை ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் ஆட்சியராகவும் (வருவாய்ப்பிரிவு), பாக் ஜலசந்தி திட்ட இயக்குநர் (மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர்), மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் டி.என்.எப்.டி.சி மேலாண்மை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நில நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, திட்ட மேலாண்மை, மின் ஆளுமை, பொதுத்துறை நிறுவன மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.

பொது சுகாதாரம், ஊரக வாழ்க்கை, நிர்வாகத்தில் பங்கேற்பு, கலாச்சார சுற்றுலா ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்தவர். மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரனின் சிறப்பான நடவடிக்கையால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜி.எஸ்.சமீரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்றுகூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. கரோனா தொற்று பரவலை முழுமையாக குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in