Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

கரோனா பாதிப்பில் இருந்து மீள மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனா தொற்றில் இருந்து மீள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலத்தில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் இத்திட்டத்தின் கீழ் இலவச அரிசியை மக்களுக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு நாட்களாக வழங்கி வருகிறார்.

சேலம் குரங்குச்சாவடியில் நேற்று பொதுமக்களுக்கு இலவச அரிசியை , உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, திமுக மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதேபோல, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

எடப்பாடி அடுத்த கச்சுப்பள்ளி பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வகணபதி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இலவச அரிசியை, உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இன்னும் இரு தினங்களில் 2-வது தவணையும் வழங்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது, தமிழகத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. முதல்வரின் நடவடிக்கைகளால், தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x