Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சி கோயிலுக்கு சொந்தமான 32 கிரவுண்ட் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 32 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் உள்ளது. இவற்றில் கதவு எண்.768-ல் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்க்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இதில் 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.

99 ஆண்டு குத்தகைக் காலம் முடிவுற்ற பிறகு, சட்டப்பிரிவு 78-ன் கீழ் நீதிமன்றத்தில் இணை ஆணையரால் சுவாதீன உத்தரவு பெறப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது.

அதனடிப்படையில், அந்த இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என்று மேற்கண்ட நிறுவனத்தினர் தெரிவித்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலரிடம் 32 கிரவுண்ட் இடம் மற்றும் பள்ளி கட்டிடங்களுடன் ஒப்படைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலரால் அந்த இடம், கோயில் வசம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயிலுக்கு சொந்தமான, மீதமுள்ள 96.5 கிரவுண்ட் பரப்புள்ள இதர இடங்களையும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அந்த இடங்களையும் முழுமையாக சுவாதீனம் எடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x