

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை 2-ம் நிலை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாமினை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். பின்னர் கரோனா தொற்று கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆய்வு பணிகளையும் மேற்கொண்டனர்.
மேல்மலையனூர், வளத்தி, முருக்கேரி (சிறுவாடி), கிளியனூர்(தைலாபுரம்) மேல்சித்தாமூர், குன்னம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் செஞ்சி, திண்டிவனம்,மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது:
கரோனா தொற்று பரவலை முற்றி லுமாக ஒழித்திடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதலாவதாகவும் மற்றும் முக்கியமானதாக கருதப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையும் முதல்வர் ஏற்கெனவே தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1,10,30,594 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 26 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழக்கூடிய பகுதியான உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையை 2-ம் நிலை மருத்துவமனையாக தரம் உயர்த்துவது தொடர்பாக முதல்வரிடம் பரிந்துரைத்து அதற்கான ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.