

நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயத்திரத்தை பழுது நீக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் நாகலாபுரத்தில் அரசு ஆரம்ப மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 படுக்கைகள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி சுமார் 100 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். பலர் உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது இங்கு கரோனாவுக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்படுகிறது. கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் அரசு சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இங்கு குடிநீர் இணைப்பு வழங்கப் படவில்லை. நாகலாபுரம் ஊராட்சி குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு ஏதுவாக, 2017-18-ல் அப்போதைய எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.5 லட்சத்தில் கருவி பொருத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கருவி இயங்கவில்லை. இதனால் அன்று முதல் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது கரோனா பரவலால் ஏராளமான கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். குடிநீருக்காக அவர்கள் வெளியே உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நாகலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பழுது நீக்கி நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்னர்.