Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளில் இருந்து இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பா நதி, அடவிநயினார் அணைகளில் இருந்து இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 10 மி.மீ., சேர்வலாறு அணையில் 7 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,115 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 131.10 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.32 அடியாக இருந் தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 124 கனஅடி நீர் வந்தது. 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 35.95 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.26 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும் இருந்தது.

இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதி களில் சாரல் மழை பெய்தது. அடவிநயி னார் அணையில் 19 மி.மீ., குண்டாறு அணையில் 5 மி.மீ., கருப்பாநதி அணை, செங்கோட்டையில் தலா 2 மி.மீ., ஆய்க்குடியில் 1 மி.மீ. மழை பதிவானது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அருவிகளில் குளிக்க தடை தொடர்கிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 60.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதி களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடனாநதி அணையில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞான திரவியம், கருப்பாநதி அணையில் இருந்து தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், அடவிநயினார், ராமநநி அணைகளில் இருந்து பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்கள் பாசனத்துக்காக நீர் திறக்கின்றனர்.

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x