

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்த வீடுகளின் கினறுகளில் குளோரின் மருந்து கலக்கும் பணி தொடங்கியுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி தெரி வித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வீடுகளின் கிணறுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளன. இதனால் கிணற்று நீர் மாசு அடைந்துள்ளது. குளோரின் மருந்து கலக்காத கிணற்று நீரை குடிப்பது, கை கழுவது, குளிப்பது போன்றவற்றால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
115 குழுக்கள் அமைப்பு
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தை சாமி கூறியதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மழை வெள்ள நீர் உள்ளே சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் கிணறுகளில் கிருமிகள் சேர்ந்துள்ளன. குளோரின் மருந்து கலக்காத கிணற்று நீரை பொதுமக்கள் யாரும் பயன் படுத்த வேண்டாம். இந்த 3 மாவட்டங்களின் வீடுகளில் உள்ள கிணறுகளில் குளோரின் மருந்து கலக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர், செவிலியர் மற்றும் ஊழியர் அடங்கிய 115 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று கிணற்றில் குளோரின் கலக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுநாள் கிணற்றில் போடும்படி பிளீச்சிங் பவுடரையும் வீட்டின் உரிமையாளரிடம் கொடுக்கின்றனர். பொதுமக்கள் வீட்டில் உள்ள நீர் தேக்கத் தொட்டியை நன்றாக பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவ வேண்டும். கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே உணவு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.