

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகின்றன. சென்னையில் டாஸ்மாக் கடைகளில் நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பாதூகாப்பு நடவடிக்கைககள் குறித்துக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று ஆய்வு நடத்தினார்.
தமிழகம் முழுவதும் இரண்டாம் அலை பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாகின. தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஊரடங்கை மீண்டும் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்பு காரணமாக மதுப்பிரியர்கள் கடைகளில் குவிவதால், தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதால் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
சென்னையில், டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று ஆய்வு நடத்தினார். பெரியமேடு, ஈவிஆர் சாலை, ஐஸ் அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''டாஸ்மாக் கடைகளில் நோய்ப் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளி மத்தியில், வட்டம் போடப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். கூட்டம் அதிகமாய் இருந்தால் சாமியானா பந்தல் போட்டு அமரவைத்து, டோக்கன் முறையில், மதுபானம் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.