

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதனால் விஜயகாந்த் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் வசிக்கிறார். இன்று மதியம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிய மர்ம நபர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக விஜயகாந்த் வீட்டுக்குத் தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் நேரில் சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சுமார் அரை மணி நேரம் விஜயகாந்த் வீடு முழுவதும் சோதனை செய்தனர்.
சோதனையில் எதுவும் இல்லை, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸார் தொலைபேசி மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற மிரட்டல் அழைப்புகளை விழுப்புரத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் செய்வது வழக்கம். இம்முறையும் அவர்தான் செய்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.