Last Updated : 13 Jun, 2021 03:49 PM

 

Published : 13 Jun 2021 03:49 PM
Last Updated : 13 Jun 2021 03:49 PM

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?- அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

பெண்ணுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் எம்பி-க்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர். படம்:ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை (ஜூன் 14) மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், அதை பாஜக எதிர்ப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று கருத்து தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதன் பிறகு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதை பாஜக எதிர்ப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

"பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. பாஜக செய்தால் நல்லது, நாங்கள் செய்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?

ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளில் டாஸ்மாக் கடை திறப்பும் ஒன்று. மது அருந்துவோர் தவறான முறைகளில் போவதைத் தடுக்கவே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகள் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது. அனைத்தையும் ஆராய்ந்துதான் அரசு முடிவு எடுக்கும். டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக தலைவர் அழைத்துப் பேசலாம். அவர்களையும் சம்மதிக்கக்கூட வைக்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் வராது" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கூறுகையில், "திருச்சி ஜங்ஷனில் நிறைவடையாமல் உள்ள மேம்பாலத்துக்கு, ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தை ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஏற்கெனவே 2 முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதற்கு ஈடாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையணிக்குச் சொந்தமான இடத்தை அளிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் டெல்லி செல்லும்போது மீண்டும் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தி, உரிய அரசாணையுடன் வருவேன். விரைவில் பணிகள் தொடங்கும்'' என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறும்போது, "நாட்டிலேயே எம்.பி. தொகுதி நிதியின் கீழ் முதன்முதலில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்தான் எஸ்கலேட்டர் வசதி நிறுவப்பட்டது. இதைப் பின்பற்றித்தான் பிற இடங்களில் நிறுவப்பட்டது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் கட்டணம் உயர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x