Published : 13 Jun 2021 03:44 PM
Last Updated : 13 Jun 2021 03:44 PM

மாணவி எழுதிய கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்: உரிய பணி அளிப்பதாக வாக்குறுதி

சென்னை

முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவி ஒருவர் கடிதம் எழுதி, 2 சவரன் தங்கச் சங்கிலியை நிவாரண நிதிக்காக வழங்குவதாகத் தெரிவித்ததால் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போனார். அம்மாணவியின் படிப்புக்கேற்ற பணி வழங்கப்படும் எனத் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் ஸ்டாலின் 12.06.2021 அன்று சேலம் மாவட்டம் சென்றிருந்தார். அப்போது, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களில் சௌமியா என்பவர் அளித்த கடிதத்தைப் படித்துப் பார்த்த முதல்வர் நெஞ்சம் நெகிழ்ந்தார். மேலும் அவரது கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மாணவி சௌமியா எழுதிய கடிதம்:

''ஐயா,

ரா.சௌமியா ஆகிய நான் B.E. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் ஓய்வுபெற்ற பணியாளர். என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர். இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களைப் படிக்க வைக்கவும் சகோதரிகளுக்குத் திருமணம் செய்யவும் செலவு செய்துவிட்டார்.

நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள். ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்றுவந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 12.03.2020 அன்று இறந்துவிட்டார். எனது தந்தை பணி ஓய்வுபெற்ற சேமிப்பு அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டார்.

அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச் செலவு (சுமார் ரூ.13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்குச் சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளோம். எங்கள் ஆதார், விலாசம் எல்லாமே மேட்டூர் என்றுதான் உள்ளது.

எனது தந்தைக்குப் பணி ஓய்வுத் தொகையாக ரூபாய் 7000/- (ஏழாயிரம்) மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3000/- (மூவாயிரம்) போக ரூ. 4000/- (நாலாயிரம்) வைத்துக் குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகளுக்கு எங்களுக்கு உதவி செய்கின்ற அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் கூட போதும் என்பதைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.

என்னிடம் பணம் இல்லாததால் கரோனா நிதித்தொகையாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை நிதியாகக் கொடுக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு சௌமியா எழுதிருந்தார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

“மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

பேரிடர்க் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x