

கோவை மாநகராட்சி நிர்வாகம், ரூ.80 கோடி தொகையை தராமல் நிறுத்தி வைத்துள்ளதாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு நேற்று இ-மெயில் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டது.
அதில்,‘‘ கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில், சாலை அமைத்தல், சாக்கடைகள் கட்டுதல் போன்ற பொதுப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 4 மாதமாக முடிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு உரிய, பில் தொகை மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இத்தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கணக்குகள் பிரிவு அலுவலகத்திலும் இதற்கான கோப்புகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் 100 வார்டுகளில் முடிக்கப்பட்ட, அனைத்து வகையான திட்டப்பணிகளுக்கு, சுமார் ரூ. 80 கோடி தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது. இதற்கிடையே, கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் ஆணையர் குமாரவேல் பாண்டியன் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.
அவரது பணிக்காலத்தில் உரிய முறையில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கோப்புகளில் அவர் கையெழுத்து போடாமல், பில் தொகை வழங்காமல் பணியிடம் மாறிச் சென்றால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு பாதிப்பும், இழப்பும் ஏற்படும். நீண்ட காலமாக மாநகராட்சி நிர்வாகத்தில் திட்டப் பணிகளை, செய்துவரும் ஒப்பந்த நிறுவனங்கள் இனி தொடர்ந்து பணிகளை செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். மாநகராட்சி நிர்வாகத்தில் பணி செய்தால் பில் தொகை பெற முடியாது என்ற நம்பிக்கை இல்லாத நிலைமை உருவாகிவிட்டது.
எனவே, ஆணையர் குமாரவேல் பாண்டியனின் பணிக்காலத்தில் முடிக்கப்பட்ட திட்ட பணிகளுக்கான தொகையை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை மூலமாக கிடைக்கவேண்டிய ரூ.80 கோடி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.