Last Updated : 13 Jun, 2021 09:33 AM

 

Published : 13 Jun 2021 09:33 AM
Last Updated : 13 Jun 2021 09:33 AM

புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு: விவசாயிகள் எதிர்ப்பு

பட விளக்கம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு அருகே கரு வடதெருவில் எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

புதுக்கோட்டை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 2017 -ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அறிவித்ததைத் தொடர்ந்து, நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியில் விவசாயத்துக்கு தொடர்பில்லாத எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தபடமாட்டாது என விவசாயிகள் நம்பியிருந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு அருகே கருவட தெரு உட்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு 10 -ம் தேதி ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த அறிவிப்பானது இப்பகுதி விவசாயிகளுக்கு தற்போது தெரியவரவே, இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வட தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிறுவனமான ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இன்று (ஜூன் 13) விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டனர்.

"ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஏலஅறிவிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடத்தியதைப் போன்று இங்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என விவசாயிகள் தெரிவித்தனர்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சூழலில், வேறொரு இடத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத்துக்கு எதிராக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படமாட்டாது என ஏற்கெனவே தமிழக சுற்றுச்சூழல்- காலமாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருவடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் அறிவிப்பார் எனவும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.ரகுபதி ஆகியோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x