

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒற்றைச் சாளர முறையை மேலும் எளிதாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை:
தமிழகத்தில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழலை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அரசு சார்ந்த 40 துறைகள், அமைப்புகளின் சேவைகள் ஒரே தளத்தில் வழங்கப்படுகின்றன. இந்த ஒற்றைச் சாளர அமைப்பை மேலும்எளிமைப்படுத்த, புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள் தொடர்பான பட்டியல் தேசிய தகவல் மையத்திடம் உள்ளது. இந்த பட்டியலையே அனைத்து அரசுத் துறைகளும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். இதுதவிர, அஞ்சல் துறை, மத்திய தகவல் தொடர்புத் துறை ஆகியவை பயன்படுத்தும் அஞ்சல் குறியீட்டு எண்ணையே அனைத்து துறைகளும் பயன்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் 4 வாரத்துக்குள் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசுத் துறைகளின் இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை, தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, நடைமுறைகளில் மாற்றம், விண்ணப்பத்தில் செய்யப்படும் மாற்றங்கள், கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்களை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
தொழில்களுக்கு அனுமதி அளிக்கும் பணிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தால், அவரது கைபேசி, மின்னஞ்சல் முகவரி, பதவி நிலை உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் ஒற்றைச்சாளர அனுமதிக்கான இணையதளத்தில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். அதேபோல, சம்பந்தப்பட்ட அனுமதி வழங்கும் துறைகளின் இணையதள பராமரிப்பு பணி நடக்கும் நிலையில், அதுகுறித்து 3 நாட்கள் முன்னதாகவே வழிகாட்டி நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒற்றைச் சாளர இணையதளத்தை எளிதாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யும் வகையில், தொழில் வழிகாட்டி நிறுவன முதன்மை செயல் அலுவலர் தலைமையில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படுகிறது. தொழில் வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் இதில் உறுப்பினர் செயலராகவும், ஒற்றைச் சாளர முறையின் திட்ட மேலாளர், பிற அரசுத் துறைகளின் பொறுப்பு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஒற்றைச் சாளர முறைக்காக இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் கள். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.