

கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள், கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தை கருணையுடன் அணுக வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் வலியுறுத்திஉள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்ற கூட்டம் காணொலி வாயிலாக நேற்றுநடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், வணிகவரித்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனா தொற்று தொடர்பான மருந்துகள், கருவிகள் மீதான ஜிஎஸ்டி சலுகை, வரிவிலக்கு குறித்து பரிந்துரைகள் வழங்க,மேகாலயா முதல்வர் தலைமையில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஒடிசா, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி மன்றத்தால் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வரி குறைப்பு தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மேலும், அவர், ‘‘கரோனா தொற்று தொடர்பான மருந்துகள், கருவிகள் மீதுகுறிப்பிட்ட காலத்துக்கு பூஜ்ய வரியை நிர்ணயிக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விஷயத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை. இவற்றின் மீது பூஜ்ய வரி அல்லது0.1 சதவீதம் வரிதான் விதிக்கவேண்டும். கரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை கருணையுடன் அணுக வேண்டும்’’ என்றார்.
மேலும், கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்திய தின்பேரில், உடல் வெப்ப பரிசோதனை கருவி மீதான வரி 18-லிருந்து5 சதவீதமாகவும், ஆம்புலன்ஸ்கள் மீதான வரி 28-லிருந்து 12 சதவீதமாகவும், தகன உலைகள் மீதானவரி 18 -லிருந்து 5 ஆகவும் குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதுசெப்.30-ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.