Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்களுக்கு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று: கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்களுக்கு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த சிங்கங்களை கால்நடை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஏற்கெனவே 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் நீலா என்றபெண் சிங்கம் உயிரிழந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 2 சிங்கங்களுக்கு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வண்டலூர்பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வண்டலூர் பூங்காவில் 3 சிங்கங்கள், 4 புலிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக இந்தியகால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடந்த 4-ம் தேதி அனுப்பப்பட்டது. அந்நிறுவனம் 9-ம் தேதி அனுப்பிய ஆய்வறிக்கையில் இறந்த நீலா என்ற சிங்கம் உட்பட2 பெண் சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்நிறுவனம் எதேச்சையாக செய்த மற்றொரு ஆய்வில், 2 சிங்கங்களுக்கு கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாதிரிகளில் கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று இல்லை.

2-ம் நிலை பரிசோதனை குறித்துஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கூறும்போது, ‘கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஏதாவதுமன அழுத்த நிலை, வேறு 2-ம் நிலைதொற்று கிருமிகளான பாக்டீரியா,வைரஸ், புரோட்டோசோவா இருப்பது பொதுவானது. மனிதர்களுக்கு வருவதுபோலவே, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு 2-ம் நிலை நோய்கிருமிகள் தொற்றுவது வழக்கமான ஒன்று’ என தெரிவித்துள்ளது.

கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சிங்கம் இதுநாள் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாக,சுறுசுறுப்பாக உள்ளது. நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புடன், கெனைன் டிஸ்டெம்பர் அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யவும், வேறு தொற்று இருக்கிறதா என கண்டறியவும் மீண்டும் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கெனைன் டிஸ்டெம்பர் என்றால் என்ன?

கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாய்களிடம் பரவக்கூடியது. இந்த தொற்றால் பாதிக்கப்படும் விலங்குக்கு காய்ச்சல், தும்மல், மூச்சு விடுவதில் சிரமம், பசியின்மை, நிமோனியா, உடல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கின் இருமல், தும்மலால் சுவாசப் பாதையில் இருந்து வெளியேறும் திரவத் துளிகள் மூலம் இத்தொற்று பிற விலங்குகளுக்கு பரவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x