Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

மத்திய தொல்லியல் துறை அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பார்வையிட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி.

திருப்புவனம்

மத்திய தொல்லியல் துறை அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம்கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மதுரை எம்பி சு.வெங்கடேசன், தமிழரசி எம்எல்ஏ பங்கேற்றனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகை நதி நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் தாய் மடியான கீழடியில் இருந்து தொடங்குகிறது. 7-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட புதிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மண் பானை ஓட்டில் 13 தமிழ் எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பேஇங்கு வாழ்ந்த மக்கள் கற்றறிந்தவர்களாக இருந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகின்றது. ஊரடங்கால் அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

அமைச்சர் பதிலால் குழப்பம்

கீழடி அருங்காட்சியகம் பணிகள் எப்போது முடிவுக்கு வரும் என செய்தியாளர்கள் கேட்டபோது, “அருங்காட்சியகத்துக்கு இடம்தேர்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. அடிப்படை வரைபடம் தயாராக உள்ளது. மிக விரைவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது சர்வதேச அளவில் இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு கேலரி அமைக்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆட்சியில் கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடப் பணிகள் நடந்து வரும் நிலையில், அமைச்சர் தெரிவித்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x