Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

கரோனா தடுப்பூசிக்காக வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி, கும்பகோணம் பகுதியில் உள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி நகராட்சி பள்ளி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

5 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்படுவதால், இந்த மையங்களில் நேற்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள திரண்டனர். இதனால்,அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் நேற்று காலை தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி வள்ளிக்கண்ணு(40) திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக, பணியில் இருந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்தனர். இதில், அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதைஅடுத்து, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் நகர் நல அலுவலர் மருத்துவர் பிரகாஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கும்பகோணம்காரனேசன் மருத்துவமனையில்தடுப்பூசி செலுத்திக்கொள்ள 250 பேர் முன்கூட்டியே டோக்கன் பெற்றிருந்தனர்.

இதில் வள்ளிக்கண்ணு என்பவர் 188-வது டோக்கன் பெற்றிருந்தார். வரிசையில் நின்று கொண்டுஇருந்த அவர் மயங்கி விழுந்ததும், உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரைபரிசோதித்தனர். அதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

அவர்களது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு வள்ளிக்கண்ணுவின் உடலைப் பெற்றுச் சென்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x