

பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் கன்னங்குறிச்சியில் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
திமுக இளைஞர் அணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு இலவச அரிசியை வழங்கி பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மக்களுடன் இருப்பது திமுக தான். ஒன்றிணைவோம் வா திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்து, தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறேன்.
சேலம் மாவட்டத்திலும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனாவை விரட்ட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனக்கு மட்டுமல்ல, அனைத்து எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைவரும் மக்களுக்கு உதவிடவும், கரோனா காலத்தில் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். சேப்பாக்கம் தொகுதி மக்கள் என்னை அவர்களது சொந்த பிள்ளையைப்போல பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சேலம் மாவட்டத்தில் இன்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலின், திமுக வின் ஒன்றிணைவோம் வா சார்பில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்குகிறார்.