

குரோம்பேட்டையில் செயல்படும் தாம்பரம் அரசு மருத்துவமனை, பல ஆண்டுகளாக தாலுகா மருத்துவமனையாக 200 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், குன்றத்தூர், வண்டலூர் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இங்கு மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், உடல்முழு பரிசோதனை ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் உள்ளன.எனவே, இந்த மருத்துவமனையைஅரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறும்போது, "அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்காக 35 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு அல்லது 28 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால் சில சமயங்களில் உயிரிழப்பு நேரிடுகிறது. தாம்பரம், பல்லாவரம் தாலுகா மக்கள் இந்த அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, கூடுதல் கட்டிடங்கள் கட்டி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தற்போது, கரோனா பேரிடர் காலமாக இருப்பதால், தாமதமின்றி இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
குரோம்பேட்டையில் உள்ளமருத்துவமனை தரம் உயர்த்தினால், சுற்றுவட்டாரப் பகுதிபொதுமக்கள் பெரிதும் பயனடைவர்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுஅளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இனியாவது இந்த மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.