

பாலாற்று வெள்ளத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பலி எண்ணிக்கையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில் உடைப்பு மற்றும் உபரிநீர் வெளியேற்றத்தால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர் நிலைகளை வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கடந்த 3, 4-ம் தேதிகளில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மாவட்டத்தில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பாலாறு மற்றும் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வேலூர், அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிலரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் கூறியதாவது: வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் உடல்களும் பாலாற்றிலும் அடையாறு ஆற்றிலும் அடித்துவரப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் பலி எண்ணிக்கையை உடனடியாக தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உரிய விசாரணை நடத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும். எனினும், இதுவரை மழையால் உயிரிழந்த 55 பேருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.