

கும்பகோணம் திருச்சியைச் சேர்ந்த நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்திவரும் வினோத் என்பவர் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்த பிரபாகரன் குறித்து அவதூறாக விமர்சித்ததாகக் கூறி, தனியார் யூ டியூப் சேனல் நடத்தி வரும் திருச்சியைச் சேர்ந்த துரைமுருகன் மற்றும் சிலர், அவரது கடைக்கேச் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வினோத் அளித்த புகாரின்பேரில், துரைமுருகன் உட்பட 4 பேரை திருச்சி கே.கே. நகர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர், திருப்பனந்தாள் போலீஸில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து யூ டியூப்பில் துரைமுருகன் அவதூறான வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், துரைமுருகன் மீது உள்நோக்கத்துடன் அவமதித்தல், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.