Published : 12 Jun 2021 05:15 PM
Last Updated : 12 Jun 2021 05:15 PM

மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்று 100க்கும் கீழ் சென்றது: தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலன்

மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்று பாதிப்பு நேற்று 100 க்கு கீழ் குறைந்தது. நேற்று 90 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைளுக்க கைமேல் பலன் கிடைத்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டு முதல் அலையில் கரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கரோனா தொற்றில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்து மதுரை 4வது இடம்பிடித்தது.

சென்னையை போல் நகர்பகுதிகளில் மதுரை மக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று மிகப்பெரிய பரவலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மாநகராட்சியின் தொற்று தடுப்பு நடவடிக்கையால் மிக விரைவிலேயே மற்ற மாநகராட்சிகளைக் காட்டிலும் மிக விரைவாக மதுரை கரோனா தொற்றிலிருந்து மீண்டது.

அதுபோல், இந்த ஆண்டும் மாநகராட்சியில் இரண்டாவது அலை தொடங்கிய ஆரம்பத்தில் சராசரியாக 1,500 முதல் 1,700 பேர் வரை பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு நூற்றுக்கும் மேல் இருந்தது.

நோயாளிகள் முழுமையான சிகிகச்சை கிடைக்காமல் திண்டாடினர். போதிய படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் கைவிடப்பட்டநிலை ஏற்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் கவனிக்க ஆளில்லாததால் தொற்று பரவக்கூடும் என்று தெரிந்தும் நோயாளியுடன் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டிய அவலம் மதுரையில் நேரிட்டது.

இந்நிலையில் மாநகராட்சி 100 வார்டுகளில் முதல் அலையில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்களை போல் இரண்டாவது அலையின்போதும் மாநகராட்சி ஆணையர் பணிகளை முடுக்கிவிட்டார்.

தொற்று பரவிய குடியிருப்புப் பகுதிகளை மூடி, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதனால், தற்போது கரோனா தொற்று மதுரை மாநகராட்சியில் 100க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்று மதுரை மாவட்டத்தில் 283 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநகராட்சிப்பகுதியில் தொற்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னை, ஈரோடு, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி போன்ற மற்ற மாநகராட்சிகள் மட்டுமில்லாது சிறு நகராட்சிகளிலும் கூட தொற்று பாதிப்பு இன்னும் குறையாதநிலையில் மதுரை தொற்று தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநகராட்சிகளுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறியதாவது:

மதுரை மாநகராட்சி 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கும், 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜ் ஆகியோர் ஆலோசனைபேரில் மாநகராட்சியின் சார்பாக 100 வார்டு பகுதிகளில் தினந்தோறும் கரோனா பரிசோதனைகள், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கரோனா இரண்டாவது அலை மார்ச் இரண்டாவது வாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக மே மாதம் 20ம் தேதி மாநகராட்சிப்பகுதியில் மட்டுமே ஒரே நாளில் 1038 நோய் தொற்று உடையவர்களை கண்டறியப்பட்டனர். தடுப்பு நடவடிக்கையால் அதன்பிறகு படிப்படியாக கரோனா நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

மாநகராட்சியின் சார்பில் நாள் ஒன்றுக்கு 170 காய்ச்சல் மற்றும் கரோனா மாதிரி பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் நாள் ஒன்றுக்கு 5500 முதல் 6000 எண்ணிக்கையிலான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மார்ச் 2021 முதல் இன்றைய தேதி வரையில் 15,601 முகாம்கள் நடத்தப்பட்டு 3,52,083 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் கரோனா பரிசோதனை முகாம் மேற்கொண்டதன் மூலம் முன்கூட்டியே நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியதின் மூலம் நோய் தொற்று பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பெற்றுள்ளது.

தற்போது ஒரு நாள் நோய்த் தொற்று 100க்கும் கீழ் குறைந்து 90 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நோய் தொற்று குறைந்தாலும் கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 5500 முதல் 6000 எண்ணிக்கையில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா பரிசோதனை முகாம்கள் எங்கு நடைபெறுகிறது என்ற விபரத்தினை அறிய மதுரை மாநகராட்சியின் 24 மணி மணி நேரமும் செயல்படும் இலவச அழைப்பு மையம் எண்.842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x