

5 நாட்களுக்குப் பின் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதை அடுத்து கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் கரோனா தடுப்பூசி போட அதிகாலையே மக்கள் குவிந்தனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 12) மாவட்டத்தில் 26 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காகத் தடுப்பூசி போடும் மையங்களில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அதிகாலை 4 மணி முதலே 50க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருந்தனர். அதன்பின் நேரம் செல்ல, ஆண்கள், பெண்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீஸார் பள்ளி உள்ள கூத்தரிசிக்காரத் தெருவின் இருபுறங்களிலும் பேரிகார்டு தடுப்புகளை வைத்து அடைத்தனர். பெண்கள் கூத்தரிசிக்காரத் தெருவிலும், ஆண்கள் ஜவஹர்பஜார், திண்டுக்கல் சாலைவரையிலும் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
காலை 9 மணிக்கு மேல் தலா 50 ஆண்கள், பெண்கள் என மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுஅவர்கள் பெயர்கள், ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இம்மையத்திற்குத் தலா 500 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்தால் வரிசையில் நின்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.