Published : 12 Jun 2021 10:53 AM
Last Updated : 12 Jun 2021 10:53 AM

ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவை வளாகமாக்கும் திட்டமிருந்தால் கைவிடுக: ராமதாஸ்

சென்னை

ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவை வளாகமாக்கும் திட்டமிருந்தால் கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசு பன்னோக்கு மருத்துவமனையை அங்கிருந்து இடமாற்றம் செய்து விட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று தமிழக மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.

ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கின்றனர். இப்போது சுமார் 500 மாணவர்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து வருகின்றனர்.

இந்த வளாகத்திலிருந்து மருத்துவமனை மாற்றப்பட்டால், மருத்துவக் கல்லூரியை மூடும் நிலை உருவாகும். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையை திமுக அரசு இடமாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையை தமிழக முதல்வரும், மருத்துவத் துறை அமைச்சரும் வெளியிட்ட இரு அறிவிப்புகள் தகர்த்து விட்டன.

சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, ஓமந்துரார் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சட்டப்பேரவை கூட்ட அரங்கு, அமைச்சர்களுக்கான அறைகள், தலைமைச் செயலகத்திற்கான அலுவலகங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும், அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு ஆகியவை தான் ஓமந்தூரார் வளாகம் மீண்டும் தலைமைச்செயலகம் - சட்டப்பேரவை வளாகமாக மாற்றப்படுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பன்னோக்கு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த வளாகம் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டால் அது நாகரிகமான அரசியலாகவும் இருக்காது; மக்களுக்கு நலன் பயக்கும் அரசியலாகவும் இருக்காது.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவை செயலகமும் போதிய இடவசதியுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பாக வடிவமைத்து உருவாக்கப்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கடந்த 2011-ம் ஆண்டு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்த தலைமைச் செயலகக் கட்டிடம் அரசு மருத்துவமனையாக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, அதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ அல்ல... இந்த ராமதாஸ் தான். அப்போதைய அரசு செய்தது மிகப்பெரிய தவறு தான்.

ஆனால், பல நூறு கோடி மக்கள் வரிப்பணத்தில் அது மிகச்சிறந்த மருத்துவமனையாக்கப்பட்டு விட்ட நிலையில், அதை அகற்றி விட்டு, அங்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை அமைப்போம் என்பது, அது முந்தைய அரசு செய்ததை விட பெரும் தவறாக அமைந்து விடும். அத்தகைய ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் இப்போது 14 துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. புற்றுநோய், கதிரியக்க மருத்துவம், முட நீக்கியல், சிறுநீரகவியல், இதயநோய்ப் பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை விட தரமான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கருவிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, எந்த நேரமும் அந்த கருவிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 7 துறைகளைத் தொடங்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அவையும் தொடங்கப்பட்டால், நாட்டின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக, ஓமந்தூரார் மருத்துவமனை உயரும். இத்தகைய சிறப்பு மிக்க மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவாவதை சீரழிக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடக் கூடாது.

தமிழக அரசு அறிவித்திருப்பதைப் போன்று கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்பது சாத்தியமல்ல. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அங்கு கொண்டு சென்று புதிய மருத்துவமனையை உருவாக்குவதற்குத் தான் அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு செய்தால் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணாகுமே தவிர எந்த பயனும் ஏற்படாது. இதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கரோனா தாக்குதலால் பொருளாதார அடிப்படையிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை, நடுத்தர மக்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அவர்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பெற முடியாது எனும் சூழலில், இந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் கூறியிருப்பதைப் போன்று, ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த இடமும் காலியாக இருப்பதாகத் தெரியவில்லை. அங்குள்ள கட்டிடங்களின் ஒரு பகுதியில் பன்னோக்கு மருத்துவமனையும், மற்றொரு பகுதியில் மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.

பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பிரிவுகள் தொடங்கப்படும் போது, கூடுதல் இட வசதி தேவைப்படும். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை புகழ்பெற்ற அரசு மருத்துவ நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதை டெல்லி எய்ம்ஸ்-க்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு தான் அரசு முயல் வேண்டும்.

எனவே, ஓமந்தூரார் வளாகத்தில் இப்போதுள்ள மருத்துவமனையை அகற்றிவிட்டு, அதை சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகமாக மாற்றும் திட்டமிருந்தால் அதைக் கைவிட வேண்டும். ஓமந்தூரார் மருத்துவமனை இப்போதிருக்கும் இடத்தில் இப்போதுள்ள நிலையில் நீடிக்கும்; அங்கு தலைமைச்செயலகம் வராது என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் , சட்டப்பேரவை வளாகம் தேவை என்றால் அவற்றை அமைக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x